பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கொண்ட சட்டப் பிரிவுகளை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசாங்கம் தனது மேன்முறையீட்டு உரிமையைக் கைவிட்டுள்ளது. இதன் மூலம், கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு தாய்மார்கள் முன்னெடுத்த பல ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் போராட்டம், வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
மகப்பேறு விடுப்பில் இருந்தபோது வேலையிழந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் காப்புறுதி (EI) நன்மைகளை மறுப்பதற்கு அடிப்படையாக, இந்த சட்டப் பிரிவுகள் அமைந்திருந்தன. தொழில் மற்றும் குடும்பங்கள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில், கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்யப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக வேலைவாய்ப்பற்றோர் காப்புறுதிச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தொழில் மற்றும் குடும்பங்கள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் வேலைவாய்ப்பற்றோர் காப்புறுதிச் சட்டத்தின் கீழ், ஒரு நபர் வேலையிழப்புக்கான நன்மைகளைப் பெற வேண்டுமாயின், அதற்கு முந்தைய 52 வாரங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை நேரங்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேவேளை, மகப்பேறு மற்றும் பெற்றோர் விடுப்பு போன்ற சிறப்பு நன்மைகளுடன் சாதாரண வேலையிழப்பு நன்மைகளையும் சேர்த்து
அதிகபட்சமாக 50 வாரங்களுக்கு மட்டுமே பெற முடியும் என்ற கட்டுப்பாடும் நிலவி வந்தது. இந்தச் சட்ட விதிகள் பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, மொண்றியல் நகரைச் சேர்ந்த லோரி சாலிபோர்-ரசின் (Laurie Chalifoux-Racine) தலைமையிலான ஆறு தாய்மார்கள், மூவ்மென்ட் ஆக்சன் சோமேஜ்' என்ற வேலையற்றோர் உரிமை அமைப்பின் ஆதரவுடன் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த வழக்கஒ விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்புச் சலுகைகளையும் வேலையிழப்புச் சலுகைகளையும் ஒன்றிணைப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டப் பிரிவுகள் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது


