கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1050 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஜூலை மாதம் 10 ஆம் திகதி உற்சவ நிகழ்வுகள் நிறைவு பெற உள்ளதுடன் மறுநாள் ( 11ஆம் திகதி) நீர் வெட்டு இடம் பெற உள்ளது.
இந்நிலையில் இவ்வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் பக்தர்களினின் நலன் கருதி விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த த சொய்யாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஐந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் , மூன்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸார் உட்பட் 1050 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பானம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து யால சரணாலயத்தின் ஊடாக பாதயாத்திரையாக ஆலயத்துக்கு வருகை தரும் யாத்திரிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி சேவைகளுக்காக முப்படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


