எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில், எரிபொருள் விலைக் குறைப்பை பெரும்பாலும் எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை தொடர்பில் இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தற்போதைய நிலையில், 7 ஆம் மாதம் முற்பகுதி வரையான காலப்பகுதிக்கு இலங்கையில் எரிபொருள் கையிருப்பில் உள்ளது. அதேநேரம், தற்போதுவரை நாம் கொள்வனவு செய்துள்ள எரிபொருள் நாட்டை வந்தடைந்தால், 9ஆம் மாதம் வரையான காலப்பகுதிக்கான எரிபொருள் இருக்கும்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலையில் ஓரளவு குறைவாக உள்ள போதிலும், மத்திய கிழக்கு போருக்கு முன்னர் நிலவிய எரிபொருள் விலையை விட தற்போதைய விலை இன்னும் அதிகமாகவே உள்ளது.
எனவே, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் விலை குறைப்பை எதிர்ப்பார்க்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிடலாம். எனினும், விலை அதிகரிப்பு உள்ளதா என்பதை தற்போது கூறமுடியாது. அதுபற்றி ஆராயப்படுகிறது.
உலக சந்தையில் இன்றைய நாளுக்கான எரிபொருள் விலை அறிவித்தல் மாலை நேரத்தில் வெளியாகும். இலங்கையில் 31ஆம் திகதிதான் எதிர்பொருள் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். எனினும், குறித்த தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், உலக சந்தையின் இன்றைய விலை நிலவர அறிவிப்பை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கப்படும்.
எவ்வாறாயினும், விலை குறைப்பு இடம்பெறாது. தற்போதைய நிலையிலே இருக்குமா? அல்லது சிறு அதிகரிப்பு ஏற்படுமா? என்பது குறித்தே ஆராய வேண்டும்.
ஆனால், பாரியளவில் விலை அதிகரிக்காது. எனவே அதுகுறித்து தேவையற்ற அச்சமடைய அவசியமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.


