Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது

இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று (23) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறந்து வைத்ததன் பின்னர், “மாகாண சபைத் தேர்தலை இவ்வருடம் நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

“கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால், அவ்வாறு திட்டமிட்டிருந்த வேளையில் நாட்டில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிச் சூழலும் உருவானது.

இதன் காரணமாக, அனர்த்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக மாத்திரம் 500 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்த நிதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியாகும். இதன் காரணமாகவே இவ்வருடத்தில் எங்களால் தேர்தலை நடத்த முடியாமல் போனது. அத்துடன், தற்போது சில புதிய சட்டப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக இருந்த சட்டரீதியான வழிமுறைகளில் குளறுபடிகள் ஏற்பட்டதே இதற்குப் பிரதான காரணமாகும். எனவே, தற்போது பாராளுமன்றத்தில் ஒரு குழுவை நியமித்துள்ளோம். மாகாண சபைத் தேர்தலை எந்தச் சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது குறித்து அக்குழு ஆராய்ந்து வருகிறது.

அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்துப் பரிசீலித்து, அடுத்த வருடமாகும்போது வேறு ஏதேனும் பாரிய பிரச்சினைகள் எழுவாவிடின், பெரும்பாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நம்புகிறோம்.

அதேவேளை, தேர்தலை நடத்துமாறு இந்தியத் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. ஏனெனில், இந்தியாவிற்கும் இலங்கையிற்கும் இடையிலும், இந்திய அரசிற்கும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் இடையிலும் மிகச் சிறந்த, நட்புறவானதொரு தொடர்பு நிலவுகிறது. எமக்கிடையே நல்லதொரு புரிதல் காணப்படுகிறது.

உண்மையைக் கூறப்போனால், வடபகுதி மக்களின் பிரதான பிரச்சினையாக இருந்த ‘இனவாதம்’ இல்லாத ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்பியுள்ளோம். அதேபோல, வடபகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பெருமளவிலான காணி நிலங்களை விடுவித்துள்ளதுடன், வீதிகளையும் திறந்துவிட்டு புதிய பாதைகளை அமைத்து வருகின்றோம்.

மேலும், ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ் அடிமட்ட மக்கள் வரை அவர்களைப் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். எனவே, தற்போது இத்தகைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். இதுகுறித்த புரிதல் இந்தியாவிற்கும் உண்டு. அதனால், இந்தியத் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. மிகவும் ஒத்துழைப்புடனும் புரிதலுடனும் நாங்கள் இணைந்து செயற்பட்டு வருகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments