சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் தனஞ்சயடி சில்வா தலைமையிலான இலங்கை அணியும், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளன.
இந்த தொடர் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 48.15 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 5-வது இடத்திலும், 41.67 சதவீதத்துடன் இலங்கை 6 ஆவது இடத்திலும் உள்ளன.
இந்த தொடரில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தனது வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தத் தொடரின் முடிவுகள் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணியின் நிலவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்:
2-0 என வெற்றிபெற்றால் – இந்தியாவின் சதவீதம் 57.58 ஆக உயரும்.
1-1 எனத் தொடர் சமநிலையில் முடிந்தால் – இந்தியாவின் சதவீதம் 48.48 ஆக நிலைத்திருக்கும்.
0-2 எனத் தோல்வியடைந்தால் – இந்தியாவின் சதவீதம் 39.39 ஆகக் குறையும் அதேவேளையில், இலங்கை 61.11 சதவீதத்துடன் 4 ஆவது இடத்திற்கு முன்னேறும்.
இந்தியா எதிர்காலத்தில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடனும் டெஸ்ட் தொடர்களில் மோத வேண்டியுள்ளதால், இந்த இலங்கைச் சுற்றுப்பயணத்தில் புள்ளிகளை இழக்காமல் இருப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இலங்கை அணியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


