அமெரிக்கா மற்றும் இலங்கை இணைந்து மேற்கொள்ளும் ‘அட்லஸ் ஏஞ்சல் II’ பேரனர்த்த மீட்புப் பயிற்சி இன்று (31) ஆரம்பமாகியுள்ளது.
ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் பேரனர்த்தங்களின்போது அவசரநிலை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான நிபுணத்துவம் மற்றும் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளன.
இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படையினருடன் மொன்டானா தேசிய காவல்படையைச் சேர்ந்த குழுக்களும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை மையமாகக் கொண்டும் கண்டியிலும் நடைபெறும் இப்பயிற்சியில், சி-130 விமானப் பராமரிப்பு, நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு, மண்சரிவு மீட்பு, சம்பவக் கட்டுப்பாடு மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் அபாயங்களைக் கையாளுதல் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.
பேரனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், மீட்புப் பணிகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் முன்னெடுப்பதற்குமான அமெரிக்க – இலங்கை படைகளின் திறனை வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.


