அமெரிக்காவுடன் தற்போது எந்தவொரு அமைதிப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை என்றும், அதற்கான திட்டங்களும் தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களைக் கைவிடுவதற்கு அமைதிப் பேச்சுவாா்த்தையே காரணம்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்த நிலையில், ஈரான் அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.
ஈரானை அமைதிப் பேச்சுவாா்த்தைக்குக் கொண்டு வரும் வகையில், அந்நாடு மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்போவதாக டிரம்ப் கடந்த சில நாள்களாக தெரிவித்து வந்தாா்.
இந்நிலையில், ‘ஏா் ஃபோா்ஸ் ஒன்’ விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘எனக்கு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில்தான் விருப்பம்; மக்களைக் கொல்ல விரும்பவில்லை.
திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஈரானுடன் பேச்சு தொடங்குகிறது’ என்றாா். ஓமனுடன் மட்டுமே பேச்சு: டிரம்பின் இந்தக் கூற்றை ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி நிராகரித்துள்ளாா்.


