அக்குறணையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரணை குருகொட ஏழாம் மைல்கல் பகுதிக்கு அருகில், சீமெந்து கலக்கும் பாரவூர்தி ஒன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அக்குரணை வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்த தகவலின்படி, விபத்தில் காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின் தாக்கத்தால் பல வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், கண்டி – மாத்தளை பிரதான வீதியிலும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பொலிஸார், அவசரகால சேவையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி, அப்பகுதியில் பயணிக்கும்போது அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


