கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலியேவ்ர், அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வாகனத் துறையில் வரியற்ற வர்த்தகத்தை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே 200 ஆண்டுகளுக்கும் மேலான உறவு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருக்கலாம் என்றும், அவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இணைந்து எதைச் செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னதாக, ஒன்ராறியோவின் விண்ட்சர் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பொலியேவ்ர், டெட்ராய்டில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலைப் பிரதிநிதிகளையும், அருகிலுள்ள மிச்சிகன் மாநிலத்தின் டியர்போர்ன் நகரில் உள்ள ஃபோர்ட் தொழிற்சாலை அதிகாரிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், மிச்சிகனில் மின்சாரத் தொழிலாளர் சர்வதேச சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவிருந்தார். இந்தப் பயணத்தில் விண்ட்சர் பகுதியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருடன் இணைந்துகொள்ளவிருந்தனர்.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் வாகன உற்பத்தி குறைவடைந்துள்ளமைக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் காரணம் எனப் பொலியேவ்ர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வர்த்தகப் போர் இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சீனா உள்ளிட்ட வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கே சாதகமாக அமைகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டுப் போட்டியாளர்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அமெரிக்காவும் கனடாவும் ஒன்றுக்கொன்று எதிராகச் செயற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் வாகன உற்பத்தித் துறையின் மையமாக விளங்கும் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல் அரசியலிலும் இந்த வர்த்தகப் போர் முக்கிய விடயமாக உருவெடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் வரியற்ற வர்த்தகத்தை ஏற்படுத்துவதற்காகத் தாம் குரல் கொடுக்கச் செல்வதாகக் குறிப்பிட்ட பொலியேவ்ர், அமெரிக்க மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களையும் அதிக வேலைவாய்ப்புகளையும் வழங்குவதே தமது திட்டம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு உலகத் தொடர் பேஸ்போல் போட்டிகளின்போது, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வர்த்தக வரிகளை விமர்சித்து, சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்துப் பேசிய காணொளித் துணுக்குகளைப் பயன்படுத்தி ஒன்ராறியோ மாகாணம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியிருந்தார்.
அதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாகக் குற்றஞ்சாட்டிய கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு கனேடியப் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா–கனடா வாகன வர்த்தகத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான வரியற்ற வர்த்தகத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் எனப் பியர் பொலியேவ்ர் வலியுறுத்தியுள்ளார்.


