Wednesday, November 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்லிட்ரோ எரிவாயு இறக்குமதி

லிட்ரோ எரிவாயு இறக்குமதி

நாட்டின் உள்நாட்டு எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்காக 45,000 மெட்ரிக் தொன் திரவ பெற்றோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ய லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், எரிவாயுக் கையிருப்புகள் உரிய காலத்தில் நாட்டை வந்தடைவதையும் அவை முறையாக விநியோகிக்கப்படுவதையும் நிறுவனம் உறுதிப்படுத்தும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் கொள்வனவு செய்ய உத்தரவிட்டிருந்ததாகவும், அதில் இதுவரை 23,400 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவரும் கப்பல் நாளை (18) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில், சந்தைக்கு வெளியிடப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையையும் லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, நவம்பர் 10ஆம் திகதி முதல் ஏழு நாட்களுக்குள் சுமார் 8 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கமாக மாதாந்தம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை 45,000 மெட்ரிக் தொன்னாக நிறுவனம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள எரிவாயுக் கப்பல் வருகைகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட விநியோகம் மூலம் நுகர்வோருக்கு தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments