தற்போது நிலவும் எல் நினோ (El Niño) நிலைமையால் யால தேசிய பூங்காவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
மழையின்மை மட்டுமன்றி, பகல் நேரங்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வனவிலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகள் எவ்வாறாயினும் தாகத்தைத் தணித்துக் கொண்டாலும், அதிக வெப்பநிலையைத் தாங்கிக் கொள்வதில் அவை பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை மேலும் மோசமடைந்தால் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை குறுகிய காலத்திற்கு யால தேசிய பூங்காவை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யால தேசிய பூங்காவின் வலயம் 01 (Block 01) மாத்திரமே மூடப்படும். யால வலயம் 02 மற்றும் வலயம் 03 ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காக தொடர்ந்து திறந்திருக்கும்.
மேலும், இந்தக் காலப்பகுதியில் கடுமையான மழை பெய்தால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி உடைந்து செல்லும் வாய்ப்புள்ளதுடன், பூங்காவுக்குள் உள்ள வீதிகளை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் மற்றுமொரு நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த காலப்பகுதியில் போதுமான மழை பெய்து வெப்பநிலை குறைந்தால், திட்டமிடப்பட்ட திகதிக்கு முன்னதாகவே யால தேசிய பூங்காவை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


