Monday, June 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மீனவர்கள் நலனில் பா.ஜ.க.வுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை

மீனவர்கள் நலனில் பா.ஜ.க.வுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை

மீனவர்கள் நலனில் பா.ஜ.க.வுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில், ஒன்றிய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை. இந்த ஒப்பந்தம் குறித்து 1974 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன்சிங் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றியிருக்கிறார். இந்த விவாதத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்று கருத்துகளை கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக பொறுப்புள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பிரதமர் வாஜ்பாய் 6 ஆண்டுகால ஆட்சியிலும், பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியிலும் கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமர்களோடு எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா ? உண்மையிலேயே மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவு காரணமாக இருந்தால் அதுகுறித்து இலங்கை அரசிடம் பேசியிருக்கலாம்.

மாறாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளேடுகளுக்கு அளித்த பேட்டியில், கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறதே என்ற கேள்விக்கு, பதிலளிக்கும் போது, ‘சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை செய்வது தான் எங்களது நோக்கம்” என்று கூறியிருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டுமென்று சொன்னால், இந்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்று கூறுவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். இதன்மூலம் கச்சத்தீவை மீட்பதற்கு அக்கறையில்லை என்பதைத் தான் இது உறுதிபடுத்துகிறது. மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், இரவு நேரங்களில் சர்வதேச எல்லையை அறியாமல் இலங்கை கடற்பகுதியில் செல்லும் போது கைது செய்யப்படுகிறார்கள். எனவே, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர இலங்கை அரசோடு பேச ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும். இதைப்போன்ற ஒரு பேச்சுவார்த்தை டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியின் போது, 2013 இல் இலங்கை அரசோடு நடத்தப்பட்டதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். எனவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி பிரச்சினையை திசைதிருப்பக் கூடாது. இதன்மூலம் மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments