Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே இந்த 6 பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2- ந்தேதி தொடங்கியது. இந்த தேர்தலில், எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க சார்பில் 2 பேரும் வெற்றி பெறுவார்கள். அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. தனது மற்றொரு எம்.பி. பதவியை கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கியது. எனவே அந்த இடத்திற்கு கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். மொத்தம் தி.மு.க. – 4, அ.தி.மு.க.-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

விதிப்படி 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாத அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள 7 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் 6 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள். எனவே இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். இதனால் கமல்ஹாசன் உள்பட வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் மாநிலங்களவை எம்.பிக்கள் ஆகிறார்கள்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments