இந்த அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த சேவையைத் தான் ஆற்றுகிறோம் என்றிருந்தால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தல் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களுக்குள்ள செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும். விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், கைத்தொழிலாளர்கள் கூட மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நாட்டின் புதிய பயணத்தின் புதிய பாதை, திருப்புமுனை ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே உருவாக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் பிரச்சினைகள் எண்ணற்ற அளவில் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் கனம் நீதிமன்றத்தின் கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க முயற்சிக்கின்றது. அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில்கள் இல்லை. இந்நாட்டின் ஜனநாயகத்தை அழித்து, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழிக்கும் வேலையையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை பலவீனப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை அழிப்பதற்கே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கம் நீதிமன்றத்தில் தலையிட்டு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை அழித்து நாட்டில் தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே முற்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயச் சங்கம் முதல் சகல நிறுவனத்தினதும் அதிகாரத்தைக் கைப்பற்றி தனிக் கட்சி ஆட்சியை நாட்டில் ஸ்தாபிக்கவே இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழித்து கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முற்படுவது இதனால்தான் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் பல துன்பங்களிற்கும் சவால்களுக்கும் மத்தியில்தான் மிகவும் சிரமப்பட்டு தமது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். சமூகத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்களைத் தவிர பெரும்பாலான மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்கின்றனர். பல துயரங்களுக்கு மத்தியில்தான் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று தேர்தல்களிலும் இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் தெரிவு செய்த ஜே.வி.பி. அரசாங்கம் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மீறி, மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் பொய் உரைக்கும், ஏமாற்றும், நாட்டு மக்களை ஏமாளிக்கும் அரசாமாகவே மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


