அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
நாங்கள் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளோம்.இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்று உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்கள் மிகப்பெரிய எண்ணை இருப்புக்களை வளர்ப்பதில் இணைந்து செயல்படும். இந்தக் கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பாகிஸ்தானில் எண்ணெய் சேமிப்பு கிடங்கை அமைக்கப்போகிறோம். யாருக்கு தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள். பல நாடுகளின் தலைவர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து உரையாடினேன். அவர்கள் அனைவரும் அமெரிக்காவை மிகவும் மகிழ்ச்சியடையச்செய்ய விரும்புகிறார்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான் அரசாங்கம் கூறும்போது, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்ட புதிய வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்படும் பாகிஸ்தான் பொருட்களுக்கான வரிகளைக் குறைக்கும் என்று தெரிவித்தது. டிரம்ப்பின் இந்த விவகாரமான பேச்சு சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


