ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.
இன்று(24) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பிய, மகளிர் அணிக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து 217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், அணித்தலைவி சமரி அத்தபத்து 29 ஓட்டங்களைபெற்ற நிலையில், ஏனைய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் தீப்தி சர்மா சிறப்பாகப் பந்துவீசி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷஃபாலி வர்மா, ஸ்ரீ சரணி மற்றும் ஷ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கமாக வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
மகளிர் கிரிக்கெட் அணியின் இந்த சாதனை இலங்கையின் பதக்கப் பட்டியலில் முதல் பதிவாக அமைந்துள்ளது.


