நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நணயக்கார இன்று (07) பாராளுமன்றில் விளக்கமளித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின்போது கைதிகள் ஆயுதங்களைப் பெற்று இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையிலானது அல்ல எனவும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய இரு கைதிக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மோதலில் ஈடுபட்ட குழுவினர் சிறை நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்டதாகவும் சிலர் சிசிடிவி கெமெராக்கள் மற்றும் உடல் பரிசோதனை உபகரணங்களையும் சேதப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
ஆயுதமற்ற சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பெரும்பாலான அதிகாரிகள் செங்கற்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தின்போது கைதிகள் அனைவரும் இரும்புக் கதவை உடைத்து வெளியேற முயன்றதாகவும், அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர் நிலைமையை கட்டுப்படுத்தவே அதிகாரிகள் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.


