Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு மைல்கல் – அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு மைல்கல் – அமைச்சர் சேகர்பாபு

விஜய் தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் சார்பில் கட்டப்படும் திருமண மண்டபம், வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் சார்பில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மண்டபம் அமைக்கும் இடம், கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் மற்றும் கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்களின் சார்பில் கட்டப்பட்டு வருகின்ற திருமண மண்டபங்கள், மூத்த குடிமக்கள் உறைவிடம் மற்றும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நேர்த்தியாக அமைந்திடும் வகையிலும், பணிகளை விரைவுப்படுத்திடவும் ஆய்வினை மேற்கொண்டோம். சென்னை, கொளத்தூர் ராஜாஜி நகரில் கடந்த 27.5.2025 அன்று முதல்-அமைச்சர் கொளத்தூர், பழனி மற்றும் திருநெல்வேலியில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் துறையின் சார்பிலான ஆய்வுக் கூட்டங்களை மேற்கொள்கின்றபோது மூத்த குடிமக்களுக்காக கட்டுகின்ற உறைவிடங்களின் பணி முன்னேற்றத்தை தொடர்ந்து கேட்டறிந்து வருகின்றார். இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மூத்த குடிமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கொளத்தூரில் அமையவுள்ள மூத்த குடிமக்களின் உறைவிடத்தில் 100 மூத்த குடிமக்கள் தங்கும் வகையில் குளியலறை, கழிப்பறை வசதியுடன் அறைகள், உணவருந்தும் அறை, நூலகம், மருத்துவ மையம், சிறு பூங்கா, யோகா மற்றும் தியான அறை, நடைபாதைகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த உறைவிடங்களை பராமரிக்க முன்னணி நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்திற்கு இதுவரை ரூ.5 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு விழாவிற்கு மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், திருக்கோவில் குடமுழுக்கை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி அகன்ற திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. முதல்-அமைச்சர் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் நடத்திய துறை ஆய்வுக் கூட்டத்தில் திருச்செந்தூர் திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு லட்சக்கணக்கான உணவு பொட்டலங்கள் தயாரித்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குடமுழுக்கு விழா பணிகளுக்காக மூன்று ஐ.ஏஎ.ஸ். அதிகாரிகள் இன்றிலிருந்து கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே திருச்செந்தூர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து, இது இந்த ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்றே குறிப்பிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments