பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று (6) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சங்கீதன் கடந்த 2 ஆம் திகதி சாவகச்சேரி காவல்துறையினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தமிழ் மக்களின் அவலங்கள், தியாகங்கள் மற்றும் வாழ்வியலைத் தனது சொல்லிசை (Rap) பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி வந்த கலைஞரான சங்கீதனின் கைது தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
“பாடினால் சிறையா? பேசினால் கைதா?”, “கலைஞர்களின் குரல்வளையை நெரிக்காதே”, மற்றும் “அநீதியான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு” போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.


