அரசுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் திட்டமிட்டுத் தள்ளப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் டெடிகம தொகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரச அதிகாரிகள் மற்றும் சாட்சிகளை வாக்குமூலம் பெறும் இடங்களுக்கே சென்று, ‘உங்களுக்கும் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்’ என அச்சுறுத்தி அழுத்தம் கொடுக்கும் கலாசாரம் உருவாகியுள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட பலரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து முறையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். அரச அதிகாரிகள் நாட்டின் நலனுக்காக முடிவுகளை எடுக்க அஞ்சும் சூழல் உருவாகியிருப்பதால், ஒட்டுமொத்த அரச கட்டமைப்புமே முடங்கியுள்ளது.
அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக கிராம மட்டத்திலிருந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


