கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள கெலோவ்னா நகர மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் டொம் டயஸ் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.
ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின்படி, டொம் டயஸ் 19,451 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரொன் கானன் 18,482 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்ட பதவியை ஏற்ற டயஸ், அப்போது பொதுமக்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான ரொன் கானனை எதிர்கொண்டு இம்முறை அவர் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.
போதைப்பொருள் பாவனை தொடர்பில் கடுமையான நிலைப்பாடு
நகரில் பொது இடங்களில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக, முதலில் சிகிச்சைக்கு முன்னுரிமை வழங்கும் அணுகுமுறையை முன்னெடுக்கப்போவதாக டயஸ் உறுதியளித்துள்ளார்.
மேலும், கெலோவ்னா நகரில் இயங்கும் கண்காணிப்பின் கீழான போதைப்பொருள் பாவனை நிலையத்தை மூடுமாறு கோரி, கனடாவின் மத்திய அரசாங்கத்திற்கும் அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொம் டயஸ், பொதுப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் தனது அணுகுமுறையைத் தொடர்ந்து முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


