Thursday, October 29, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக் முதல்வர் – கனேடியப் பிரதமர் இடையே அதிகாரப் போட்டி

கியூபெக் முதல்வர் – கனேடியப் பிரதமர் இடையே அதிகாரப் போட்டி

பிரதமர் மார்க் கார்னிக்கும் கியூபெக் மாகாண முதலமைச்சர் போல் செயின்ட்-பியர் ப்ளமாண்டனுக்கும் இடையே தீவிர அதிகாரப் போட்டி உருவாகியுள்ளது.

மொன்றியல் நகரில் 21 ஆவது கனடா – ஐரோப்பிய ஒன்றிய (EU) உச்சிமாநாடு வியாழக்கிழமை(29.10.2026) தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தில் உரைநிகழ்த்த அனுமதி மறுக்கப்பட்டமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் சர்வதேசப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் உரைநிகழ்த்தத் தனக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என கியூபெக் முதலமைச்சர் போல் செயின்ட்-பியர் ப்ளமாண்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இருப்பினும், அவருக்குப் பேசும் நேரத்தை வழங்கப் பிரதமர் மார்க் கார்னி மறுத்துவிட்டதால், இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்பாரா என்பதில் பெரும் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.

கியூபெக்கில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் தனது மாகாணத்தின் குரலை ஒடுக்குவதற்கு மத்திய அரசாங்கம் முயற்சிப்பதாக முதலமைச்சர் ப்ளமாண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்துக் கியூபெக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ப்ளமாண்டன், ”கியூபெக்கின் பொருளாதார நலன்கள் விவாதிக்கப்படும் ஒரு சர்வதேச நிகழ்வில், மாகாண முதலமைச்சருக்கு உரைநிகழ்த்த இடம் ஒதுக்காதது கியூபெக் மக்களுக்குச் செய்யப்படும் மரியாதைக்குறைவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மாகாண நலன்களை சர்வதேச அரங்கில் எடுத்துரைக்கக் கியூபெக்கிற்கு உரிமை உண்டு என்று சுட்டிக்காட்டிய அவர், கியூபெக்கின் வர்த்தகப் பற்றாக்குறையைச் சீரமைப்பதற்கு அந்த மாகாணத்தின் குரல் ஐரோப்பிய ஒன்றியத்துடனான மாநாட்டில் ஒலிப்பது அத்தியாவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை மொன்றியலிற்கு வரவேற்பதற்கும், அவருடன் ஒரே மேசையில் இரவு விருந்தில் பங்கேற்பதற்கும் கியூபெக் முதலமைச்சருக்குத் தகுந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

”ஐரோப்பிய ஒன்றியத் தலைவருடன் கலந்துரையாடி நல்லுறவை வளர்த்துக்கொள்ள இதுவொரு மிகச் சிறந்த வாய்ப்பு” என்று தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, கியூபெக் முதலமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து மாநாட்டில் பங்கேற்பார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments