கியூபெக் மாகாணத்திலுள்ள ஆர்ம்ஸ்டவுன் (Ormstown) நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்று சந்தேகத்திற்குரிய முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து அப்பகுதியில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான நான்காவது தீவைப்பு சம்பவம் இதுவென்பதால், ஆர்ம்ஸ்டவுன் நகரில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகின்றது.
லேம்ப்டன் வீதியில் (Lambton Street) அமைந்திருந்த ‘பிஸ்ஸரியா ஆர்ம்ஸ்டவுன்’ உணவகத்திலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த வேளையில் உணவகம் மூடப்பட்டிருந்தமையால், எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், உணவகம் முழுமையாக அழிந்துள்ளது.சம்பவ இடத்தில் இருந்து தீப்பற்ற வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.


