கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயமடைந்த மேலும் இரு இராணுவ வீரர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவின் தேசிய பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் 25 வீரர்களில் நான்கு பேர், தங்களது குடும்பத்தினருக்கு அருகில் சிகிச்சை பெறும் வகையில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி, கனடியப் படைகளின் வைன்ரைட் (Wainwright) இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பலத்த காற்றினால் பரவிய காட்டுத்தீ மற்றும் புல்வெளித் தீ பரவியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதற்கு முன்னர் 13 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 14 இராணுவ வீரர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஒவ்வொருவரினதும் குணமடைதல் பயணம் வெவ்வேறாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புத் திணைக்களம், பாதிக்கப்பட்ட வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தொடர்ச்சியான உதவிகளும் சேவைகளும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீ விபத்துக்கான காரணங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் மூன்று தனித்தனி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


