கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முன்னுரிமைத் தொழில் பிரிவுகளை கனடா அறிவித்துள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Express Entry குடிவரவு முறைமையின் ஊடாகப் பல்வேறு துறைகளில் அனுபவமுள்ள நிபுணர்களை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பின்வரும் தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
- சுகாதாரம் மற்றும் சமூக சேவைத் துறை நிபுணர்கள்.
- திறன் தொழில்களில் அனுபவமுள்ள தொழிலாளர்கள்.
- ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைப் பணியாளர்கள்.
- விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த நிபுணர்கள்.
- போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள்.
அத்துடன், கனடாவில் பணிபுரிந்த அனுபவமுள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களும் Express Entry முறைமையின் கீழ் முன்னுரிமைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
கனடாவின் தற்போதைய தொழிலாளர் படைக்கு மேலதிக திறன்களை வழங்குவதுடன், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என IRCC தெரிவித்துள்ளது.
Express Entry என்றால் என்ன?
Express Entry என்பது கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் (Permanent Residence) பெற விரும்பும் திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடிவரவு விண்ணப்பங்களை நிர்வகிக்கும் முறைமையாகும்.
இதன் கீழ், குறிப்பிட்ட தொழில் தகுதிகள், பணி அனுபவம் மற்றும் மொழித் திறன்களைக் கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பிரிவு அடிப்படையிலான அழைப்புகள் (Category-based Invitations) ஊடாக நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படலாம்.
இந்த அறிவிப்பு, கனடாவில் குடியேற விரும்பும் இலங்கையைச் சேர்ந்த திறமையான தொழில் வல்லுநர்களுக்கும் முக்கிய வாய்ப்பாக அமையக்கூடும். எனினும், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட குடிவரவு தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


