Monday, March 16, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.சி.சி. 'ஹால் ஆப் பேம்' -ல் இணைந்த தோனி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஐ.சி.சி. ‘ஹால் ஆப் பேம்’ -ல் இணைந்த தோனி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை ஐ.சி.சி. ‘ஹால் ஆப் பேம்’ என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐ.சி.சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு இந்த கவுரவத்தை ஐ.சி.சி. வழங்கியுள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி 3 ஐ.சி.சி. வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை (டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தவர். அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். அதனால் அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.சி.சி. ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்த மகேந்திரசிங் தோனிக்கு தமிழக முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “ஐ.சி.சி. ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்ததற்கு வாழ்த்துகள் தோனி. அதிக ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி, அதிக ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளீர்கள். 3 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 ஐ.பி.எல். பட்டங்கள் மற்றும் சாம்பியன்ஸ் லீக் வெற்றிக்கு வழிநடத்தியது வரை, நீங்கள் ஒரு சிறந்த பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

நீங்கள் தலைமையை அமைதியுடன் மறுவரையறை செய்துள்ளீர்கள். விக்கெட் கீப்பிங்கை ஒரு கலையாக மாற்றியுள்ளீர்கள். மேலும் தெளிவு மற்றும் உறுதியின் மூலம் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் பயணம் இப்போது கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்துள்ளது. நீங்கள் எப்போதும் ‘தல தோனி’ என்று புகழப்படுவீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments