ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற உலக தரவரிசை மேசைப்பந்துப் போட்டிகளில் பங்கேற்று நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கையின் இளம் மேசைப்பந்து வீரர் தாவி சமரவீர இன்று (12) காலை நாடு திரும்பியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற மூன்று உலக தரவரிசைப் போட்டித் தொடர்களில் பங்கேற்று இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார்.
அதன்படி,
- இத்தாலி: லிக்னானோ நகரில் ஒக்டோபர் 21 முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான உலக தரவரிசைப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
- ஸ்லோவாக்கியா: செனெக் நகரில் ஒக்டோபர் 25 முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான உலக தரவரிசைப் போட்டியில் மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
- மொண்டெனேகுரோ: பொட்கோரிகா நகரில் நவம்பர் 3 முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோர் மற்றும் 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டு உலக தரவரிசைப் போட்டிகளில் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதன்மூலம் ஐரோப்பியப் போட்டிச் சுற்றுப்பயணத்தில் மொத்தம் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 8.32 மணியளவில் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR-664 விமானம் மூலம் டோஹாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.
அவரை வரவேற்பதற்காக நெருங்கிய உறவினர்கள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே சர்வதேச அரங்கில் சாதனை படைத்துள்ள தாவி சமரவீரவின் இந்த வெற்றி இலங்கை விளையாட்டுத்துறைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.


