Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இதுவரை எம்முடன் பேசவில்லை - ஹக்கீம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இதுவரை எம்முடன் பேசவில்லை – ஹக்கீம்

மேயர் வேட்பாளர் தொடர்பில் கூட்டணி கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இந்த விவகாரம் தொடர்பில் எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் புதன்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது குறித்து முஜிபுர் ரஹ்மான் மற்றும் நாமல் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை மேயராக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மேயர் வேட்பாளர் தொடர்பில் கூட்டணி கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இந்த விவகாரம் தொடர்பில் எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். கொழும்பு மாநகரசபை விவகாரம் தொடர்பில் தனக்கும் ஸ்திரமான நிலைமை என்ன என்பது தெரியாது என்றே நாமல் ராஜபக்ஷவும் குறிப்பிட்டிருந்தார்.

எமது கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கிறது.

ஆனால் இது கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இன்னும் இது தொடர்பில் எம்முடன் பேசவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரத்தை வழங்குமாறு கோரினோம். விரைவில் எம்மை அழைப்பதாகக் கூறியிருக்கின்றார்.

கொழும்பு மாநகரசபை தொடர்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் என்னுடன் கலந்துரையாடியிருக்கின்றனர். மேயர் வேட்பாளர் தொடர்பில் எமக்கு திருப்தியளிக்கக் கூடியவாறான தெளிவுபடுத்தலை கட்சி வழங்க வேண்டும்.

கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டுமெனில் பல்வேறு கட்சிகள் இணைய வேண்டும். ஆனால் இதுவரை எந்த கட்சியுடனும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. நாம் ஒரு கூட்டணியின் பங்காளி கட்சியாக இருப்பதால் அதற்கே முன்னுரிமையளிப்போம். எனவே அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments