கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவை பாரம்பரிய முறைப்படி நிறைவு செய்யும் நீர் வெட்டும் சடங்கு இன்று (28) காலை கெடம்பே மகாவலி நீர் வெட்டும் இடத்தில் இடம்பெற்றது.
எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி ஊர்வலம் நேற்று (27) இரவு வெற்றிகரமாக வீதி உலா வந்தது.
அதன்பின்னர் நாதா, விஷ்ணு, கதிர்காமம் மற்றும் பத்தினி ஆகிய நான்கு மகா தேவாலய ஊர்வலங்களும் மீண்டும் அந்தந்த தேவாலயங்களை வந்தடைந்து தேவ பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், கடுகேலே வீதி வழியாக கெடம்பே மகாவலி நீர் வெட்டும் இடத்திற்கு சென்றன.
அங்கு பாரம்பரிய நீர் வெட்டும் விழா சடங்குப்பூர்வமாக நடத்தப்பட்ட பிறகு, ஊர்வலம் மீண்டும் கண்டி விநாயகர் ஆலயத்திற்கு வந்து, அங்கிருந்து கெடிகே ராஜமகா விகாரையை சென்றடைந்தது.
கெடிகே ராஜமகா விகாரையிலிருந்து இன்று பிற்பகல் 2:18 மணிக்கு வடக்கு நோக்கி புறப்படும் பகல் ஊர்வலம், டி.எஸ். சேனாநாயக்க வீதி, பன்சல பார மற்றும் தேவ வீதி வழியாக ராஜவீதிக்குத் திரும்பி, ஸ்ரீ தலதா மாளிகை சதுக்கத்தை மூன்று முறை வலம் வரவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 4:01 மணிக்கு வடக்கு நோக்கிய திசையில் தலதா மாளிகைக்குள் பிரவேசிக்கும்.
ஊர்வலம் மாளிகையை சென்றடைந்ததும், தியவதன நிலமே உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்களின் பஸ்நாயக நிலமேக்கள் ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லவுள்ளனர்.
அங்கு எசல பெரஹரா விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவிக்கும் பாரம்பரிய நற்செய்திப் பத்திரிகை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஊர்வலத்தில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட பின்னர், இவ்வாண்டிற்கான கண்டி எசல பெரஹரா விழா உத்தியோகபூர்வமாக நிறைவடையும்.


