ஸிம்பாப்வேக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் பவன் ரத்நாயக்க முதல் தடவையாக இடம்பெறுகிறார்.
இத் தொடரை முன்னிட்டு வழமையான அணித் தலைவர் சரித் அசலன்க தலைமையிலான 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் அறிவித்தது.
உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இலங்கை அணிக்கான போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததன் காரணமாக பவன் ரத்நாயக்க குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களாக பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, நிஷான் மதுஷ்க, சதீர சமரவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
அவர்களில் சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகியோர் பந்துவீச்சிலும் ஈடுபடக்கூடியவர்கள்.
சகலதுறை வீரர்களாக துனித் வெல்லாலகே, மிலன் ரத்நாயக்க ஆகியோரும் சுழல்பந்துவீச்சாளர்களாக மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டர்சே ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
இலங்கை குழாம் இன்று இரவு ஸிம்பாப்வே நோக்கி பயணமாகும்.
ஸிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஹராரேயில் ஆகஸ்ட் 29, 31ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.


