வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்.
இது குறித்து அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இணையத்தின் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஒளிப்பாய்ச்சு மீன்பிடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் படகுகள் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அவசரகால கடல் மீட்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அதிநவீன வசதிகளைக் கொண்ட இரண்டு மீட்புப் ரெஸ்கியூ (Rescue) படகுகள் இவ்வருடத்திற்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கடலில் அவசரநிலைகளுக்கு விரைவாக பதிலளித்து, மீனவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
காணாமல் போகும் படகுகளுக்கு தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதுதொடர்பில் இலங்கை கடற்படையுடன் கலந்துரையாடி வருகின்றோம்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை 138 இற்கும் மேற்பட்ட புதிய படகுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமான படகுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஏனைய மீனவர்களுக்கு நஷ்டஈடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்றங்களால் மீனவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார இழப்புகளுக்கான நிவாரண மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அதற்கான நடைமுறை தீர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்.
கடந்த கால அரசாங்கங்களைப் போன்று அல்லாமல், தற்போதைய அரசாங்கம் மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்பையும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கருதுகிறது. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


