Sunday, September 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்இரண்டு மாதங்களுக்குப் பின் மீட்கப்பட்ட சிறுவர்கள்

இரண்டு மாதங்களுக்குப் பின் மீட்கப்பட்ட சிறுவர்கள்

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தில் ‘ஆம்பர் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 7 ஆம் திகதி அல்பர்ட்டாவின் கிராண்ட் பிரேரி பகுதிக்கு அருகிலுள்ள வால்ஹல்லா சென்டர் என்ற கிராமத்திலிருந்து, நீதிமன்றக் காவல் உத்தரவை மீறி 6 வயதுச் சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அச்சிறுவன் அவனது பெற்ற தாயாரான கிறிஸ்டா மோரிசன் (35), அவரின் காதலர் டேனியல் லூட்விக் (35) மற்றும் 4 வயதுடைய தம்பியுடன் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு ‘ஆம்பர் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த ஜூலை 10 ஆம் திகதி இவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தென்பட்டதை அடுத்து, அல்பர்ட்டாவில் ஆம்பர் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது.

எனினும், அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்குப் பிராந்தியங்கள் மற்றும் யூகான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிறப்புப் பொலிஸ் பிரிவினர் சிறுவர்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ‘வெஸ்ட் கெலோவ்னா’ பகுதியில் உள்ள கிராமப்புறப் பண்ணை ஒன்றில் வைத்து இரு சிறுவர்களும் வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

நீதிமன்றக் காவல் உத்தரவை மீறிய குற்றத்திற்காகக் கிறிஸ்டா மோரிசன் மற்றும் டேனியல் லூட்விக் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கான பிணை விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெறவுள்ளதுடன், விசாரணைக்காக அவர்களை மீண்டும் அல்பர்ட்டாவிற்கு அழைத்து வரவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, ஆம்பர் அலர்ட் விதிகளின்படி மூத்த சிறுவனுக்கு மட்டுமே அது முதன்முதலில் விடுக்கப்பட்டதாகவும், இளைய சிறுவனுக்கான உத்தரவு குழந்தைகள் நலச் சேவையினால் பிறப்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தற்போது மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் பிரிட்டிஷ் கொலம்பியா குழந்தைகள் மற்றும் குடும்ப நலச் சேவைத் திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ளதுடன், விரைவில் அல்பர்ட்டாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments