Sunday, March 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது - திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது – திருமாவளவன்

சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தி.மு.க.வுடனான கூட்டணியில் விசிக இருந்துவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வி.சி.கவில் எனது பயணத்தை தொடங்கினேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்கள் நன்கு அறிவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான அரசியல். குறிப்பாக ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாக இங்கு பதிவு செய்கிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை, எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறியும் பணியில் ஈடுபடுவேன். சமூக அநீதிகளுக்கு எதிரான எனது குரல் சமரசமின்றி ஒலிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின்பும் தன்னை பற்றி பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார். ஆதவ் இப்படி பேசி வருவதைப் பார்த்தால் அவருக்கு ஏதோ திட்டம் இருப்பதுபோல தெரிகிறது. இடைநீக்கம் என்பது வெறும் கண்துடைப்பு அல்ல” என்று திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “மழை வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் கால்நடைகள், பொருட்களின் சேதங்களுக்கு ஏற்ப நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments