Sunday, October 4, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற டாம் கிம்முக்கு இராணுவ சேவையில் இருந்து விலக்கு

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற டாம் கிம்முக்கு இராணுவ சேவையில் இருந்து விலக்கு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், தென்கொரிய இராணுவத்தின் கட்டாய சேவையிலிருந்து கோல்ஃப் வீரர் டாம் கிம் விலக்கு பெற்றுள்ளார்.

24 வயதான டாம் கிம், இறுதிச் சுற்றுக்கு முன்னதாகவே முன்னிலையில் இருந்தார். இறுதிச் சுற்றில் 6 அண்டர் பார் 64 என்ற சிறப்பான ஸ்கோரை பதிவு செய்த அவர், மொத்தமாக 18 அண்டர் ஸ்கோருடன் போட்டியை நிறைவு செய்து, 3 ஸ்ட்ரோக்குகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

17ஆவது ஹோலில் போகி அடித்ததால் சிறிது பதற்றம் ஏற்பட்டாலும், அதற்கு முன்னதாக 5 பேர்டிகள் மற்றும் ஒரு ஈகிள் அடித்திருந்ததால் அவரது முன்னிலை தொடர்ந்தது. இறுதி ஹோலில் பாரை பதிவு செய்து வெற்றியை உறுதி செய்த பின்னர், டாம் கிம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

தென்கொரியாவில் உடல் தகுதியுள்ள ஆண்கள் பொதுவாக 28 வயதுக்குள் 18 முதல் 21 மாதங்கள் வரை கட்டாய இராணுவ சேவையை மேற்கொள்ள வேண்டும்.

எனினும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு அடிப்படைப் பயிற்சியைத் தவிர, இராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

முன்னாள் டோட்டன்ஹாம் கால்பந்து வீரர் சன் ஹியுங்-மின் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் இதுபோன்ற விலக்கைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற பிரசிடென்ட்ஸ் கோப்பை போட்டியிலிருந்து அவசரமாக ஜப்பான் சென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற டாம் கிம், குறைந்த தூக்கம் மற்றும் 14 மணி நேர நேர வித்தியாசத்தையும் எதிர்கொண்டு போட்டியில் விளையாடியுள்ளார்.

உலக தரவரிசையில் 32ஆவது இடத்தில் உள்ள டாம் கிம், இதுவரை 4 PGA டூர் பட்டங்களையும், கடந்த ஜூலை மாதம் ஸ்காட்டிஷ் ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இராணுவ விலக்கைப் பெறும் வாய்ப்பை நெருங்கியிருந்த அவர், இறுதியில் 8ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

இதேவேளை, தென்கொரிய அணியில் இடம்பெற்றிருந்த 28 வயதான எஸ்.எச். கிம், அணிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்ததால் இராணுவ விலக்கைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments