சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கருதப்படும் 3 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகமவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பிரபல அரசியல்வாதியின் நெருங்கிய சகாவிற்கு சொந்தமானவை என பாணந்துறை வலானை இலஞ்சம், ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனங்களில் சொகுசு மொன்டெரோ ஜீப் ஒன்றும் மற்றும் கேரவன் வேன் ஒன்றும் அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு, பண்டாரகம வீதாகம பகுதியில் ஒரு நபருக்கு சொந்தமான சந்தேகத்திற்கிடமான வேன் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், அந்த வேன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வேனில் பொருத்தப்பட்டுள்ள பதிவு இலக்கம், ஹொரணை மில்லனிய பகுதியில் உள்ள மற்றொரு வாகனத்திற்கு சொந்தமானது எனவும், அது சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஒருவரால் பயன்படுத்தப்படும் வாகனம் எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஜீப் வாகனத்தில் உள்ள பதிவு இலக்கம், மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி முறைமையில் தரவுகளை மாற்றி, தயாரிக்கப்பட்டது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாணந்துறை வலானை இலஞ்சம், ஊழல் தடுப்புப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


