அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களுடன் வீதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
W. P. J. சேனாதீர (போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு) பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களுடன் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், இவ்வாறு விதிமீறி வாகனம் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களுடன் வீதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து காவல்துறைக்கும் அறிவிக்கப்படட்டுள்ளது.
தற்போது நடைமுறையில், அதிக சத்தம் எழுப்பும் வாகனம் செலுத்தினால் அபாராதம் விதிக்கப்பட்டு அதற்கான படிவம் வழங்கப்படும்.
ஆனால், வாகனத்தை ஒருபோதும் திருத்தம் செய்ய மாட்டார்கள். எனவே புதிய நடைமுறையாக அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களுடன் வீதிகளில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை காவல்துறை பொறுப்பில் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகன பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்படும். 50,000 முதல் 75,000 ரூபா வரையில் வழக்கிற்கு செலவாகும்.
இவ்வாறாக சட்டத்தை நூற்றுக்கு நூறு வீதம் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


