நாட்டு மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட அவர்,
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே அரச பதவிக்குத் தகுதியானது ஜே.வி.பியா அல்லது உண்மையிலேயே பொதுமக்களுடன் இணைந்து நிற்கும் அரசியல் இயக்கமா என்பதை மக்கள் முன்னிலையில் அறிந்துகொள்ள முடியும்.
இனியாவது விவசாயிகளை அவமதிப்பதை ஆளும் தரப்பு நிறுத்த வேண்டும். இத்தகைய அவமதிப்புகளைச் செய்வதற்கு முன், தங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசால் உரிய தீர்வை வழங்க முடியாவிட்டால், நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான, யதார்த்தமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதற்கு எங்கள் தரப்பு தயாராக இருக்கின்றது. – என்றார்.


