மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் வகையில் மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமரின் சட்டத் துறை அறிவித்துள்ளது.
1MDB நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜீப் ரசாக்கிற்கு, முன்பு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை 2024ஆம் ஆண்டு ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. புதிய முடிவின்படி, அவரது தண்டனைக் காலம் 2028 ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை தொடரும்.
வீட்டுக் காவலுக்கான நிபந்தனையாக 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 1MDB தொடர்பான மற்றொரு வழக்கில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்காக நஜீப்பிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
நஜீப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை, பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான கூட்டணி அரசுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நஜீப் சார்ந்துள்ள UMNO கட்சி, அன்வர் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


