பிராந்திய நாடுகள் வெளிநாட்டுத் தலையீடின்றி தங்களுக்குள் ஒத்துழைத்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.
தெஹ்ரானில் நடைபெற்ற பொதுநிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இடம்பெற்ற மோதல்கள் பிராந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவும், இனி நிலைமைகள் முன்பிருந்ததைப் போன்று இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைதியையோ பாதுகாப்பையோ ஏற்படுத்தத் தவறியுள்ளதுடன், மாறாக பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிராந்திய நாடுகள் தன்னிறைவு அடைவதற்கு உதவும் எந்தவொரு முயற்சியையும் ஈரான் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், பிராந்தியத்தில் போர்களைத் தூண்டி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதைத் தடுப்பதுடன், நாடுகளைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.


