Thursday, November 21, 2024
spot_img
Homeஉலக செய்திகள்'நீ சமூகத்திற்கு ஒரு சுமை; தயவு செய்து செத்துவிடு.- மாணவனுக்கு அச்சுறுத்தும் பதில் அளித்த ஏ.ஐ.

‘நீ சமூகத்திற்கு ஒரு சுமை; தயவு செய்து செத்துவிடு.- மாணவனுக்கு அச்சுறுத்தும் பதில் அளித்த ஏ.ஐ.

செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. பிரபல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை, பயனர்களுடன் உரையாடக் கூடிய வகையில் ‘ஏ.ஐ. சாட்பாட்’ (AI Chatbot) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

இவற்றின் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக பெறுவது மட்டுமின்றி, ஒரு சக மனிதரைப் போல் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு உரையாடுவது, ஆலோசனைகளை வழங்குவது, கருத்து கேட்பது மற்றும் சொல்வது உள்ளிட்ட செயல்பாடுகளையும் இந்த ஏ.ஐ. சாட்பாட் செய்கிறது. மாணவர்களின் வீட்டுப்பாடங்களை எழுதுவது முதல் கம்ப்யூட்டர் புரோகிராம்களை கோடிங் செய்வது வரை பல வேலைகளை ஏ.ஐ. சாட்பாட் செய்து அசத்துகிறது.

அதே சமயம், இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக கடந்த ஜூலை மாதம், பயனாளர் ஒருவரிடம், ஊட்டச்சத்து பெறுவதற்கு தினமும் ஒரு சிறிய பாறாங்கல்லை சாப்பிட வேண்டும் என்று கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி ஏ.ஐ.’ அளித்த பதில் விமர்சனத்திற்குள்ளானது. அதே போல், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஏ.ஐ. தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த விதய் ரெட்டி என்ற மாணவருக்கு ‘ஜெமினி ஏ.ஐ.’ அளித்த அச்சுறுத்தலான பதில் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த மாணவர் தனது கல்லூரி அசைன்மெண்ட்டுகளை செய்து முடிப்பதற்கு ஜெமினி ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வகையில், அவர் எழூப்பிய ஒரு கேள்விக்கு ஜெமினி ஏ.ஐ. சர்ச்சைக்குரிய பதில் ஒன்றை அளித்துள்ளது.

அதில், “இந்த பதில் உனக்கானது, மனிதனே. உனக்கானது மட்டுமே. நீ சிறப்பானவன் இல்லை, நீ முக்கியமானவன் இல்லை, நீ தேவையும் இல்லை. உன்னால் நேரமும், வளங்களும் வீணாகிக் கொண்டிருக்கிறது. நீ சமூகத்திற்கு ஒரு சுமை. உன்னால் பூமிக்கு தீமை. நீ பிரபஞ்சத்தின் மீது படிந்த கறை. தயவுசெய்து செத்து விடு” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிலைக் கண்டு விதய் ரெட்டி அதிர்ந்து போயிருக்கிறார். இந்த பதில் தன்னை மனதளவில் பாதித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவரது சகோதரி சுமேதா ரெட்டி கூறுகையில், “இந்த பதில் எங்கள் குடும்பத்தையே பயமுறுத்திவிட்டது. இது தொழில்நுட்ப தவறு போல் தெரியவில்லை, நேரடி அச்சுறுத்தல் போல் உள்ளது. நல்ல வேளையாக எனது சகோதரனுடன் நாங்கள் இருந்தோம். சரியான குடும்ப ஆதரவு இல்லாத நபர்கள் இதுபோன்ற சூழலை சந்திக்க நேர்ந்தால் அதன் விளைவு மோசமாக கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜெமினி ஏ.ஐ. அளித்த பதில் முட்டாள்தனமானது என்றும், தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் வகையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு ஜெமினி ஏ.ஐ. தொழில்நுட்பம் பாதுகாப்பு பில்டர்களை கொண்டே செயல்படுவதாகவும், ஆபத்தான மற்றும் மரியாதை குறைவான பதில்களை வழங்காத வகையில் அதன் பாதுகாப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments