Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நிதிக் குழுவில் முன்னிலையாகாத நிதி அமைச்சின் செயலாளர்: தண்டனை வழங்க கோரிக்கை!

நிதிக் குழுவில் முன்னிலையாகாத நிதி அமைச்சின் செயலாளர்: தண்டனை வழங்க கோரிக்கை!

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற நிதிக் குழுவில் முன்னிலையாகாவிடின், பாராளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிற்கு அதிகாரம் உள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’  அமைப்பு தெரிவித்துள்ளது.

நிதிக் குழுவின் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்று நிதி அமைச்சின் செயலாளர் இன்று (30) சமூகமளிக்க முடியாது என கடிதம் மூலம் அறிவித்துள்ளார். திறைசேரியிலிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன் கொடுப்பனவு, மூன்றாம் தரப்பு ஒன்றின் கைக்குச் சென்றமை (சைபர் தாக்குதல் சந்தேகம்) தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழ், எவரையும் குழுவிற்கு அழைக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அழைப்பை மீறுவோருக்கு உயர்நீதிமன்றம் அல்லது பாராளுமன்றத்தின் மூலம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இது ஹேக்கர்களின் செயலா என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்றும், மின்னஞ்சல் ஊடாக இடம்பெற்ற இந்த கொடுக்கல் வாங்கலில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments