2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான Rassemblement National (RN) இன் தலைவர் மரீன் லூ பென் வெற்றி பெற்றால், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகப் பலர் தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு நினைப்பது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் வெற்றி பெற்றால் அனைத்துப் பிரெஞ்சு மக்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன். பிரான்ஸை விட்டு வெளியேற வேண்டும் என அவர்கள் நினைப்பது தவறானது” என மரீன் லூ பென் தெரிவித்துள்ளார்.
Marianne வார இதழுக்காக Ifop நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, லூ பென் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், பிரெஞ்சு மக்களில் 21 சதவீதத்தினர் நாட்டை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
குறிப்பாக, பிரெஞ்சு முஸ்லிம்களில் 46 சதவீதத்தினரும், யூத மதத்தைச் சேர்ந்தவர்களில் 44 சதவீதத்தினரும், ஜீன்-லூக் மெலன்சோனின் La France Insoumise (LFI) கட்சி ஆதரவாளர்களில் 43 சதவீதத்தினரும் இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளதாகக் கருத்துக்கணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவுகள் தொடர்பாக CNews தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவித்த லூ பென், பிரான்ஸ் என்பது சம்பந்தப்பட்ட மக்களின் தாய்நாடு என்றும், அவர்கள் பிரெஞ்சுக் குடிமக்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
“அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நினைப்பது முற்றிலும் தவறு. நமக்கு ஒரேயொரு நாடுதான் உள்ளது. எனது அரசியல் கொள்கைகளுடன் அவர்கள் முரண்படலாம். இருப்பினும், நான் ஜனநாயகத்தையும் அனைத்து அரசியல் கருத்துகளையும் மதிக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
மேலும், மதச் சுதந்திரத்தையும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் முழுமையாக மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்லாம் பிரெஞ்சுக் குடியரசின் கொள்கைகளுடன் இணக்கமாக இருக்க முடியும் எனத் தான் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
“குடியரசுக்கு எதிரானது ஷரியத் சட்டமும் இஸ்லாமிய அடிப்படைவாதமும்தான். அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவே எனது நடவடிக்கைகள் அமையும். சாதாரண முஸ்லிம் மக்கள் அச்சப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.


