ஹெஸ்பொல்லா ஈரானுடன் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், தெற்கு லெபனானில் மேலதிகப் பகுதிகளைக் கைப்பற்றுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அச்சுறுத்தியுள்ளார்.
இன்று இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லெபனியப் பகுதிக்கு விஜயம் செய்தபோது காட்ஸ் இவ்வாறு கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஹெஸ்பொல்லா ஈரானுடன் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அது கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும்.
மேலும், தெற்கு லெபனானில் உள்ள நபாத்தியே (Nabatieh) மற்றும் லிட்டானி (Litani) பகுதிகளில் மேலதிக நிலப்பரப்புகளை இழக்கும்.
அந்தப் பகுதிகள் இஸ்ரேலின் நிரந்தர பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதியாக மாறும். தரைவழித் தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேலிய இராணுவம் தயாராக உள்ளது.
மேலும், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், அந்தப் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்.
இதனால் பெருமளவிலான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.” என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.


