தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு கிழக்கே, வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுப்பெற்றுள்ளது.
இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இத்தொகுதியானது, திருகோணமலையில் இருந்து சுமார் 600 கி.மீ. தூரத்தில், வடகிழக்கு திசையில் நிலைபெற்றிருந்தது.
மேலும் இத்தொகுதியானது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் வடக்கே சாய்வாக வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை (16) காலையில் தீவிர தாழமுக்கமாகவும், இரவுக் காலத்தில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் புயலாகவும், நாளை மறுநாள் (17) மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் தீவிர புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
எனவே, வட அகலாங்கு 05 க்கும் 15 க்கும் இடையில் மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80 க்கும் 90 க்கும் இடையில் உள்ள கடல் பிராந்தியங்களிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறித்த கடல் பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அத்திணைக்களம் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினரை அறிவுறுத்தியுள்ளது.


