Wednesday, September 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தியவன்னா ஓயா மாசுபாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

தியவன்னா ஓயா மாசுபாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments