காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் (78) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (17) காலமானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், வழக்கறிஞராக பணியாற்றியதுடன் உயர்நீதிமன்றத்திலும் சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளார்.
1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை சிவகங்கை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர், 2004 முதல் 2016ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
2013–14 காலப்பகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சராக சுதர்சன நாச்சியப்பன் பதவி வகித்தார்.
மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சுதர்சன நாச்சியப்பன், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


