Friday, October 16, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் 2026 வரவு - செலவுத் திட்டம்

கனடாவின் 2026 வரவு – செலவுத் திட்டம்

கனடா அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், அந்நாட்டின் பெரும்பாலான வர்த்தகத் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக KPMG நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னியின் பொருளாதார மற்றும் நிதித் திட்டங்கள் நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், 71 சதவீத வர்த்தகத் தலைவர்கள் வர்த்தகத்துக்குச் சாதகமான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்பார்ப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக கனடாவின் பொருளாதார எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், வர்த்தக வளர்ச்சியையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும் கொள்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு வர்த்தகத் தலைவர்களிடையே காணப்படுவதாக KPMG Law Canada நிறுவனத்தின் தேசியத் தலைவர் லாக்லன் வுல்ஃபர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கச் சந்தையை மட்டும் சார்ந்திருப்பதைக் குறைத்து, ஏனைய சர்வதேசச் சந்தைகளுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான கனடா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் வர்த்தகத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவீதமானோர், அமெரிக்காவுக்கு அப்பாற்பட்ட சந்தைகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிலையான வர்த்தகப் பங்காளிகளுடன் புதிய உறவுகளை ஏற்படுத்தும் கனடாவின் முயற்சிகளுக்கு 84 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவைப் பெறுவதற்காகக் காத்திருக்கத் தயாராக இருப்பதாக 72 சதவீத வர்த்தகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கனடாவின் பொருளாதாரப் போட்டித்திறனை அதிகரிப்பதற்காக மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகத் தடைகளை நீக்குதல், ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள் மற்றும் வரி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதுடன், உள்நாட்டுத் தொழில்துறையின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவது முக்கியம் என KPMG சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வெறும் பொருளாதாரத் திட்டங்களுடன் நின்றுவிடாமல், உள்நாட்டு வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கும் உறுதியான நடவடிக்கைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதே அந்நாட்டின் வர்த்தகத் தலைவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments