மென்பொருளில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் குறைபாடு காரணமாக, கனடா அரசாங்கத்துக்குச் சொந்தமான சில இணையத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத் துறை அமைச்சர் Evan Solomon தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கணினி கட்டமைப்புகளையும் கனேடிய மக்களின் தகவல்களையும் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த இணையத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் சைபர் பாதுகாப்பு மையத்தின் (Canadian Centre for Cyber Security) வழிகாட்டுதலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“இந்த நிலைமையை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கருதுகிறோம். கனேடிய மக்கள் நம்பியிருக்கும் சேவைகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றும் இணையப் பாதுகாப்புக் குழுக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பாதுகாப்புப் புதுப்பிப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட இணையத்தளங்கள் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்” என அமைச்சர் Solomon தெரிவித்துள்ளார்.
மேலும், இது உலகளாவிய பிரச்சினை எனக் குறிப்பிட்ட அவர், உலகின் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் நிறுவனங்களும் இதேபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
தற்போது செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் இணையத்தளங்களில் Statistics Canada வின் இணையத்தளமும் அடங்கும். அத்துடன், கனடாவின் புத்தாக்கம், அறிவியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தித் துறையின் (Innovation, Science and Economic Development Canada) கீழ் இயங்கும் ஒழுங்குமுறை அமைப்பான Measurement Canada வின் இணையத்தளமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


