கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் உதவித் திட்டமான OSAP நிதிக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், வேலையற்றவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கும் Better Jobs Ontario திட்டத்தின் சில நிதியுதவிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக உதவியில் தங்கியிருப்பவர்களை வேலைவாய்ப்புச் சந்தைக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாகாண அரசு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடவில்லை. எனினும், நிதியுதவியை எதிர்பார்த்துள்ளவர்கள் மற்றும் பயிற்சி வழங்கத் தயாராக இருந்த கல்வி நிறுவனங்கள் தாமதங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளன.
லண்டன் நகரைச் சேர்ந்த ரீஸ் டேனியல் என்பவர், ஒக்டோபர் 19ஆம் திகதி HVAC எனப்படும் வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் குளிரூட்டல் தொடர்பான பயிற்சிப் பாடநெறியை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார்.
அவரது நிதியுதவி ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக ஒக்டோபர் 13ஆம் திகதி கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதுடன், விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பயிற்சிப் பாடநெறியின் அடுத்த சேர்க்கை 2027 மே மாதத்திலேயே நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி தன்னை மீண்டும் வாழ்க்கையில் முன்னேற உதவும் என எதிர்பார்த்ததாகத் தெரிவித்த டேனியல், நீண்டகாலத் தாமதம் காரணமாகத் தொழிலுக்குச் செல்வதையும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
டேனியலின் விண்ணப்பத்துக்கு உதவிய Pathways Employment Help Centre அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பென் செசில், தமது அமைப்பின் ஏனைய பயனாளர்களும் இதேபோன்ற தாமதங்களையும் நிச்சயமற்ற நிலைமையையும் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திடம் பலமுறை விளக்கம் கோரிய போதிலும், உறுதியான முடிவு கிடைக்காததால் டேனியல் உள்ளிட்ட பலரால் திட்டமிட்டபடி பயிற்சியை ஆரம்பிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், Career Colleges Ontario அமைப்பும், தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான Better Jobs Ontario நிதியுதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தனது உறுப்பினர் நிறுவனங்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க இணக்கப்பாட்டு குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படாத கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான நிதியுதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள் தமக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


