க.பொ.த உயர்தரப் பரீட்சையை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 இல் ஆரம்பிக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
க.பொ.த உயர்தரப் பரீட்சையானது ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற பின்னணியில், பெற்றோரின் அல்லது மாணவர்களின் அல்லது ஆசிரியர்களின் எவ்வித கோரிக்கைகளும் இன்றி, இதற்காக அரசியல் கட்சியொன்று தலையீடு செய்து பிள்ளைகளின் இந்தப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கோ அல்லது ஒரு வகையான செல்வாக்கு செலுத்தக்கூடிய செயன்முறைக்கோ பிரவேசித்துள்ளது.
பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ள தேசிய கல்வி நிறுவனம், இந்த உயர்தரப் பரீட்சைக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு 300 நாள்கள் போதுமானது என்பதை நேரடியாகவே பிரகடனப்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக 300 நாள்களுக்கும் அதிகமானதொரு காலப்பகுதியை வழங்கிய பின்னரே இந்தப் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். பிள்ளைகளின் கல்வி சார்ந்து முன்னெடுக்கப்படும் இந்த இழிவான அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பரீட்சையை எவ்வித தடையுமின்றி குறித்த திகதியிலேயே நடத்துவதற்கு கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியன தங்களின் சரியான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் – என்றார்.


